மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது

71 0

வைத்தியசாலையில் ஏதேனும் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சமயத்திலும், மருந்து விநியோகப் பிரிவால் மருந்துகள் வழங்கப்படாத சந்தர்ப்பங்களிலும் பிரதேச கொள்முதலுக்கு அமைய மருந்துகளைப் பெற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான பணம் சுகாதார அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணையுடன் இதை குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ  வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை (17) விஜயம் செய்திருந்த அமைச்சர், வைத்தியசாலை நிர்வாகிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சிறுநீரக வைத்தியசாலை சீனாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். தற்போது  வைத்தியசாலையில்  உருவாகி உள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.  அதற்கான முறையான திட்டமிடல் அவசியம்.

பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையுடன்  இணைந்த ஒரு அமைப்பாக சிறுநீரக வைத்தியசாலையை பராமரிப்பதும், மேம்படுத்துவதும் எமது முதன்மையான நோக்கமாகும். ஆகையால் இது தொடர்பில் முழுமையான  அறிக்கை சமர்ப்பிப்பதற்கான குழு விரைவில் நியமிக்கப்பட வேண்டும். சிகிச்சை சேவைகளை மக்களுக்கு முறையாக வழங்க சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைக்கு அவசியமான மருந்து. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப்  பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். வைத்தியசாலையின் வளங்களை வெறுமனே வீணடிக்காது அவற்றின் மூலம் பிரதேசமக்கள் பலன் பெற வேண்டும்.

வைத்தியசாலையில் தற்போது வெற்றிடமாக உள்ள மனிதவள தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை பூர்த்தி செய்ய விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு வைத்தியசாலையில் ஏதேனும் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சமயத்திலும், மருந்து விநியோகப் பிரிவால் மருந்துகள் வழங்கப்படாத சந்தர்ப்பங்களிலும் பிரதேச கொள்முதலுக்கு அமைய மருந்துகளை பெற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான பணம்  சுகாதார அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஆகையால் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணையுடன் இதை குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றார்.