மருந்தாளுநர்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வுகாண காலக்கெடுவுடன் கூடியதொரு திட்டமொன்று தேவையாகும். அதனால் இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு வீதியில் இறங்க வேண்டாம். அது மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மருந்தகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மருந்துகளை வழங்கும் செயல்பாடானது தொழில் முறை சார் செயல்முறையொன்றாகும். இது முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயல்முறையாகும். அரச வைத்தியசாலைகளில் கூட மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகையால் கொள்கையளவில் நாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மருந்தாளுநரின் செயல்முறை தொழில் முறை நிபுணத்துவம் வாய்ந்ததொரு செயல்முறை என்பதால், அந்தத் தகுதி உள்ள ஒருவரால் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் காணப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண காலக்கெடுவுடன் கூடியதொரு திட்டமொன்று தேவையாகும் . மருந்தகங்களை மூடுவதோ அல்லது மருந்து வழங்கும் செயன்முறையை தாம் விரும்பிய வகையில் முன்னெடுப்பதோ இந்தப் பிரச்சினைக்கான பதிலாக அமையாது.
இச்சமயம் இந்தப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வீதியில் போராட்டங்களுக்கு இறங்கினால், அது அரசியல் கட்சிகளுக்கே பயனளிக்கும் விடயமாக காணப்பட்டாலும், அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக அமைந்து விடும். எனவே இந்தப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வீதியில் இறங்க வேண்டாம்.
பொது மக்கள் குறித்து சிந்தித்து அதற்கேற்ப செயல்படுங்கள். இச்சமயம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, மருந்தகங்கள் முறையாகச் செயல்படுவதோடு, தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களால் முறையாகப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன். இந்தப் பற்றாக்குறை தீரும் வரை நடுநிலையிலிருந்து செயல்படுங்கள். உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களை ஒப்பந்த முறையின் மூலம் இடைநிலைப் பயிற்சியை வழங்கி மேற்பார்வையின் கீழ் பணியமர்த்த நடவடிக்கை எடுங்கள். மருந்துகளை ஒழுங்கற்ற முறையில் வழங்குவது தவறாகும். இதுபோன்ற இடைநிலை தீர்வுக்கு செல்லுங்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பேன் என்றார்.

