சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

58 0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (COPE) பரிந்துரையின் அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் விஜித் கே. மலல்கொட செயற்படுகின்றார்.

பிற உறுப்பினர்களாக, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனநாயக்க,  முன்னாள் மேலதிக செயலாளர் (அரச வள மற்றும் நிறுவன அபிவிருத்தி அமைச்சு) வ. எம். சி. பண்டார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவித் தனிப்படை கணக்காய்வாளர் ஹசந்தி பாதிரண ஆகியோர் உள்ளடக்கப்படுகின்றனர்.

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஹசந்தி பதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை 60 நாட்களுக்குள் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு குறித்த விசாரணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.