2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 34 பேர் பாதாள உலக கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் காயமடைந்த 39 பேரில் 30 பேர் பாதாள உலக கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன.
மீதமுள்ள 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகளும் 165 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ரி – 56 ரக துப்பாக்கிகள் 23, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 46, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் 1,165 ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

