யேமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.
யேமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
யேமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, சிறுவர்களின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதுடையவர்கள். மற்றைய இருவர் 14 வயதுடையவர்கள் என்றும், ஐந்தாவது சிறுவனின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.
யேமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் ஆரம்பமாகியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.

