தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து 3 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இன்று வரை அந்த பதவிக்கான நியமனம் வழங்கப்படவில்லை. குறித்த வெற்றிடத்துக்காக பொருத்தமான ஒருவரை அரசியலமைப்பு பேரவை விதந்துரை செய்யாமையால் மக்களுக்கு பெரும் வெற்றியை வழங்கிய தகவல் அறிதலுக்கான உரிமை ஆணைக்குழுவின் செயலாற்றுகை பெரும் இடையூறுகளுக்கு முகம்கொடுப்பதாக பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் விவாதிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை 2016/12 இலக்க தகவல் அறிதல் உரிமை சட்டமாக சட்ட கட்டமைப்பில் இணைந்தமை நாட்டு பிரஜைகள் பெற்ற சிறப்பான பெரும் வெற்றியாகும்.
குறிப்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பற்றி அக்கறை கொண்டுள்ள அமைப்புகள் மற்றும் பிரஜைகள் தகவல் அறிதல் உரிமையைப் பயன்படுத்திப் பெற்றுக்கொண்ட தகவல்களை சமூகமயப்படுத்துவதன் மூலம் இதுவரை இடம்பெறாத அளவில் தகவல் வெளியிடும் கலாச்சாரம் சமூகத்தில் தோன்றியுள்ளதுடன், தகவல் அறிதல் சட்டம் அண்மைக் காலத்தில் பிரஜைகள் பயன்படுத்தும் மிகவும் பலமான ஆயுதமாகவும் மாறியுள்ளது.
இருந்தபோதிலும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ள தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினரகளின் தலைவர் விலகியதன் காரணமாக ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது.
குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டதுடன், விண்ணப்பம் செய்வதற்கான இறுதித் திகதி முடிவடைந்து 3 மாதங்களுக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும், குறித்த வெற்றிடத்துக்காக பொருத்தமான ஒருவரை அரசியலமைப்பு பேரவை விதந்துரை செய்யாமையால் மக்களுக்கு பெரும் வெற்றியை வழங்கிய தகவல் அறிதலுக்கான உரிமை ஆணைக்குழுவின் செயலாற்றுகை பெரும் இடையூறுகளுக்கு முகம்கொடுப்பதை அவதானிக்கிறோம்.
ஏனைய ஆணைக்குழுக்களைப் போலன்றி, தகவல் அறிதலுக்கான உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களைப் பெயர் குறிப்பிடுதல் அரசியலமைப்பு பேரவைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கருமமாகும். அரசியலமைப்பு பேரவை குறிப்பிடும் பெயர்களிலிருந்து பொருத்தமான ஒருவரை தவிசாளராக பெயரிடுதல் ஜனாதிபதிக்கு உரிய பொறுப்பாகும்.
அதற்கமைய, தற்போது வெற்றிடமாகவுள்ள ஆணையாளர் பதவிக்கு மக்களின் கௌரவத்தை பெற்றுக்கொண்ட, கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்ற தெளிவான குறிக்கோள் உள்ள நபரை பெயர் குறிப்பிடுதல் அரசியலமைப்பு பேரவைக்குள்ள கையுதிர்க்க முடியாத பொறுப்பாகும்.
அதன் பின்னர் தற்போது ஆணைக்குழவில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்களில் ஒருவரை அல்லது புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினரை தவிசாளராக நியமிக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உண்டு.
மிகவும் பொருத்தமான நபரை வெற்றிடமாக உள்ள ஆணையாளர் பதவிக்கு முன்மொழிய வேண்டிய பொறுப்பு விசேடமாக 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இருப்பதாக கருதுகிறோம்.
மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் துரிதமாக கவனத்தைச் செலுத்தி வெற்றிடமாகவுள்ள ஆணையாளர் பதவிக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, கௌரவமான, கடந்த காலத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத மற்றும் ஆணையாளரின் பணிப்பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்றக்கூடிய நபரை தலைவராக நியமனம் செய்வதற்கும், தகவல் அறிதல் உரிமை ஆணைக்குழுவின் கருமங்கள் மற்றும் பணிகளை மிகவும் சிறப்பாக நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆளணி மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் மிகவும் அக்கறையுடன் கோருகிறோம்.

