ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அசோக்க கருணாதிலக்க இன்று வெள்ளிக்கிழமை (11) காலை 9.30 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் நுவரலெியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் விஜேவர்தன உள்ளிட்ட நகர பிரமுகர்கள் மற்றும் , நகர சபை உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்வின் போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நகர பிதா அசோக்க கருணாதிலக்க அங்கு உரையாற்றுகையில் சமாதான நகர் என போற்றப்படும் அட்டன் நகரில் பல பிரச்சினைகள் உள்ளன. வரலாற்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஆனால் அதிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நகரில் புரையோடிப் போயிருக்கும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே எமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்து விட்டோம். நாள் ஒன்றுக்கு சுமார் நாற்பதாயிரம் பேர்வந்து போகும் நகராக அட்டன் விளங்குகின்றது.
உல்லாசப்பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. அதற்கேற்றாற் போல் நகரை அழகாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் நகரசபைக்கு மாத்திரமின்றி ஒவ்வொரு நபருக்கும் உள்ளது. எனவே எமது நகரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அழகாக்குவோம். அதற்கு அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைவோம் என்றார்.

