அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே,
1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும். 1958ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் முடுக்கிவிடப்பட்ட இன அழிப்பு வன்செயல்கள், 1983 யூலை 23ஆம் திகதி வேறொரு பரிமாணத்தினைத் தொட்டது. உயிரோடு தீயிட்டும், வெட்டியும், சுட்டும், தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைகள் செய்தும் 3000தமிழர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமது சொந்த மண்ணினை விட்டு புலம்பெயரவேண்டிய காரணமாகவும் 83 யூலை மாத இன அழிப்பு வன்செயல்கள் அமைந்துவிட்டது. அன்பார்ந்த மக்களே,கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவுகளோடு டுசில்டோர்வ்(Düsseldorf)நகரில் எதிர்வரும் 23.07.2025 அன்று ஒன்றிணைவோம். 77 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் சிங்கள-பெளத்த இனவெறி அரசுகளின், ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக் கொடூரங்களை மீண்டுமொருமுறை செம்மணியிலே உலகம் பார்க்கிறது. இவ்வேளையில் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி, எமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடவேண்டிய பெருங்கடமை புலம்பெயர்ந்துவாழும் எமக்குண்டு.
அன்பார்ந்த உறவுகளே,
எமது போராட்ட இலக்குகளிலிருந்து எம்மைத் திசைதிருப்பும் எமது எதிரிகளின் சூழ்ச்சிப்பொறிகளில் அகப்படாமல் உறுதியோடு ஒன்றிணைவோம்.
1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் தாம் விரும்புவது தமிழீழத் தனியரசு என்பதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் ஒருமனதாகக் கூறிவிட்டனர். எனவே உலகில் ஜனநாயக்கத்தைப் போதிக்கும், நேசிக்கும் எந்தவொரு நாடும் தமிழீழக் கோரிக்கையினை அங்கீகரிப்பதே அவர்களது தார்மீகக் கடமையாகும்.
கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவு சுமந்து ஒன்றிணைவதோடு, உறுதியோடு போராடி எமது உரிமைகளை வென்றெடுப்போம்.
” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”