பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துஷார உபுல்தெனிய இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துஷார உபுல்தெனியவை 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் துஷார உபுல்தெனியவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதித்து அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் துஷார உபுல்தெனிய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் பிரவேசிக்க இடைக்காலத்தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துஷார உபுல்தெனிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

