யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம் – அரசாங்க அதிபர்

139 0

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன்   தலைமையில் புதன்கிழமை (09)  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,

தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைய,  தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 200 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம்  இரு வாரங்களுக்கு  வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் சிறப்பான ஒருங்கிணைப்பினை தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், ஏனைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்ட செயற்றிட்டத்தின் பின்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி  தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக, உதவிப் பொது மேலாளர்  தே.வைகுந்தன்  விபரமாக விபரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் 200 தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில்  மேலதிக அரசாங்க அதிபர்  கே. சிவகரன், பிரதம கணக்காளர் .எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் .இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வா  எஸ். ரமேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், பிரதி /உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.