14 வயது சிறுமி கர்ப்பம் ; போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

78 0

14 வயதுடைய சிறுமியை கர்ப்பிணியாக்கியதாக கூறப்படும் போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பாணந்துறை மேல்நீதிமன்ற நீதவான் சமன் குமார கடந்த திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.

ஹொரணை, ஹிம்புட்டுஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய போலி பூசாரி ஒருவருக்கே இவ்வாறு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நஷ்டஈடு வழங்காவிட்டால் மேலும் 24 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பூசாரி போன்று வேடமணிந்து சமய சடங்குக்காக ஹொரணை, ஹிம்புட்டுஹேன பிரதேசத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு குறித்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

இதன்போது இந்த போலி பூசாரி குறித்த வீட்டிலிருந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமி கருத்தரித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலி பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக தொடரப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து  அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.