நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்

74 0

நாட்டில் பல்வேறு இனக்குழுக்களிடையே வெறுப்பை விதைத்த  75 ஆண்டுகால சர்வாதிகார அரசியல் கலாசாரத்தை வேரோடு ஒழிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முடிந்துள்ளதாகத் தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,  நாட்டை ஒரு வளமான தேசத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணருவதாக ஜனாதிபதி வழங்கிய  வாக்குறுதியை  விரைவாக  நிறைவேற்றுமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கையும் விடுத்தார்.

அன்னாரின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (7) கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது விசேட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கர்தினால்,

75 வருட காலமாக இருந்த சர்வாதிகாரத்துக்கு இடமளித்த அரசியல் தீவிரவாதிகளை சமூகத்தில் இருந்து ஒடுக்குவதற்கு தற்போது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரணம் இந்த நாட்டில் பல சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டன. ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் என இந்த நாட்டை நேசித்தவர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள். பலர் அழிக்கப்பட்டார்கள். நாட்டில் ஊழலை தோற்றுவித்தார்கள். சர்வாதிகார அரசியலமைப்பை உருவாக்கினார்கள்.

நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவர்களுக்கு  இடையில்  இன, மத பேதங்களை உருவாக்கி 30 வருடங்களாக நாட்டை அழிவுக்கு உட்படுத்தினார்கள். யுத்தத்துக்கு வழி வகுத்தார்கள். எனினும் தற்போது இந்த அரசியல் தீவிரவாதிகளை சமூகத்தில் இருந்து ஒடுக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முடிந்துள்ளது. இதற்காக நாம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.

எமது நாட்டுக்கு புதிய ஆரம்பம் ஒன்று தேவைப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.  மத மற்றும் கலாசார பெறுமதிகளையும், சாந்தி மற்றும் சமாதானத்தையும் பாதுகாத்து எமது நாட்டை சௌபாக்கியம் மிக்க நாடாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பாடு அவரிடத்தில் கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்வைக்கும் வியடங்களை பின்பற்றுவதை விட, எமது நாட்டில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத  மக்களின் வாழக்கைச்செலவை குறைப்பதற்கும் நாட்டின் விவசாயம், மீன்பிடி மற்றும் தொழிற்றுதறைகளை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நட்டில் இடம்பெற்ற காணாமலாக்கப்ட்ட சம்பவங்கள், மனிதப்படுகொலைகள், பாதாள உலக செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட  பயங்கரவாத செயற்பாடுகள், நாட்டை கடன் சுமைக்கு தள்ளிய ஊழல் செயற்பாடுகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.  அதேபோன்று எதிர்காலத்தில் அத்தகைய நிலைமைகள் ஏற்படாமல் இருக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணருவதாக ஜனாதிபதி எமக்கு அளித்த வாக்குறுதியை  விரைவாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இந்த வியடம் தொடர்பில் ஆராயுமாறு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வினயமாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.