கொள்கலன்களுக்கு உரித்துடைய நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை மறைக்க அரசாங்கம் முயற்சியா ?

109 0

சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கு உரித்துடைய நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடாமல் இருப்பதன் மூலம் அரசாங்கம் இதனை மறைப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் கோட்டாபய அரசாங்கத்தில் வட் வரி குறைத்ததன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட வருமான இழப்புக்கு சமமான இழப்பு, கொள்கலன் விடுவிப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பரிசோதனையின்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து மெளனம் காத்து வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் வட் வரியை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் சுமார் 600 பில்லியன் ரூபா வரை இழந்தது. தங்களுக்கு தேவையான வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கு இந்த வட் வரி குறைப்பும் காரணமாக அமைந்தது. அதேபோன்றே தற்போது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டிய 309 கொள்கலன்கள் பரிசோதனை செய்யப்படாமல் சுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் நாட்டுக்கு  ஏற்பட்டுள்ள வருமான இழப்பு தொடர்பில் இதுவரை வெளிவரவில்லை. வட் வரி குறைத்ததால் ஏற்பட்ட வருமான இழப்புக்கு நிகரான இழப்பு இதன் மூலம் ஏற்பட்டிருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் இருந்த பொருட்கள், அந்த கொள்கலன்கள் உரித்துடைய நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறது. அதனால் அரசாங்கத்தின் ஆலோசனையுடனே இந்த 309 கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்துடன் நெருக்கமான, தேர்தல் காலத்தில் உதவி செய்த நிறுவனங்களின் கொள்கலன்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அதேநேரம் சில வாரங்களுக்கு முன்னர் சுங்க திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பெயர்களை வெளியிட்டிருந்தார். இந்த பொருட்கள் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி இருந்தபோதும் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட பொருட்களாகும். அதேபோன்று எஸ்.எல்.எஸ். பரிசோதனைக்கு உள்வாங்கப்படவேண்டிய  பொருட்களாகும். இந்த பொருட்கள் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் பரிசோதனைக்கு உள்வாங்கப்பட்டதா? எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழுடனா இந்த பொருட்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன? யார் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்? தற்போது குறித்த பொருட்கள் அந்த  நிறுவனங்களின் களஞ்சியசாலைக்கு சென்றிருக்கலாம். இவ்வாறான நிலையில், எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழை பெறுவதற்கு, குறித்த நிறுவனங்கள் உண்மையாகவே அந்த பொருட்களைத்தான்  சமர்ப்பிக்கும்  என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அத்துடன் மருந்துப் பொருட்கள் அந்த கொள்கலன்களில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் சபையின் அனுமதியுடனா இந்த மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன? குறித்த கொள்கலன்கள்  விடுவிக்கப்பட்டு  6 மாதங்களுக்குப் பின்னரே அரசாங்கம் அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டது. எனவே, இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மெளனமாக இருப்பதன் மூலம் இந்த விடயத்தில் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது  என்பது தெளிவாகிறது.