பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
மலர் வளையம் ஏந்திவர தமிழீழத் தேசியக்கொடியுடன் நாட்டுப்பற்றாளர் கலாஜோதி கோகுலதாஸ் அவர்களின் திருவுருவப்படத்தையும் தாங்கி வர செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பினர், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தினர் அவரின் பேழையை தாங்கி மண்டபம் வந்திருந்தனர். தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் பொறுப்பாளர் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க துணைவர் ஈகைச்சுடரினையும், பிள்ளைகள் மலர் வணக்கத்தையும் செலுத்தியதோடு அகவணக்கம் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பக நாட்டுப்பற்றாளர் மதிப்பு அறிக்கையும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், பிராங்கோ தமிழ்ச்சங்கம் திறான்சி அறிக்கைகள் வாசித்தளிக்கப்பட்டது. பேரக்குழந்தைகளின் நினைவுப் பகிர்வும் இடம்பெற்றது. சம நேரத்தில் குழந்தைகள் பெரியவர்கள் என நீண்ட வரிசையில் நின்று மக்கள் அவரின் புகழ் உடலுக்கு மலர் வணக்கம் செய்திருந்தனர்.
தான் உயிருடன் வாழ்ந்த காலத்தில் தனக்கு விருப்பமான சில விடயங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி அவருக்கு விருப்பமான பாடல் மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி தாய்மடியில் வீழ்ந்தான் மாவீரன் என்ற பாடலை பாடகி சோனா பாடியிருந்தார். அதே வேளை அவரது இளைய மகளுக்கான திருமணம் இரண்டு நாட்களில் நடைபெறவிருந்த வேளை அவரின் உயிர் பிரிந்த போது தாயின் விருப்பத்தை மகளும், மருமகனும் அவர்களின் பெற்றோர்களும் விரும்பியதற்கு அமைய அவர்முன் புகழுடலுக்கு முன்பாக அனைத்து மக்களின் மலர் வாழ்த்துகளுடன் தமது திருமண மோதிரத்தை மாற்றி ஒரு புரட்சிகரமான விடயத்தைச் செய்திருந்தனர்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் அழுகுரல் ஓசையுடன் அவரின் புகழ் உடல் அக்கினியில் சங்கமிக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தேசத்தை தன் குடும்பத்தின் மேலாய் நேசித்து அதற்காக தனது இறுதிவரை பல்வேறு நெருக்கடிகள், சோதனைகள், உடல்உபாதைகள் அனைத்தையும் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டு பணியாற்றிய ஒரு தேசவிடுதலைப்பற்றாளர் மக்கள் மனங்களில் நீக்கமறக் கலந்து விடைபெற்றார்; அவர் தன் வாழ்நாளில் ஆற்றிய தேசப்பணிக்கு உயர் மதிப்பாக “ நாட்டுப்பற்றார் என்ற பட்டத்தை எம்தேசம் வழங்கியிருந்தது. கடும் வெப்பம், பணிநாளாக இருந்தாலும் அவரின் மீது பற்று வைத்த மக்கள் பலர் வந்து கலந்து தமது வரலாற்றுக்கடமையைச் செய்திருந்தனர். அனைவருக்கும் நாட்டுப்பற்றாளர் கலாஜோதி கோகுலதாஸ் அவர்களின் துணைவர் பிள்ளைகள் தமது நன்றியையும் தெரிவித்திருந்தனர்.
(ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.)