மக்களிடமிருந்து அறவிடப்படும் தீர்வை வரியை மீள மக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம்!

81 0

இந்நாட்டில் பொதுமக்களிடமிருந்து தீர்வை வரியாக அறவிடப்படும்  பணத்தை  திரைசேரியில் சேகரிகரித்து அவற்றை மீள ஒன்று திரட்டி பொதுமக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை ஆகியவற்றின் அபிவிருத்திக்காக இவ்வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தை, குறித்த வைத்தியசாலைகளின் தேவைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அண்மையில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அவ்வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலை ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி கண்காணிப்பு விஜயத்தின் போது  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக சுகாதார அமைச்சு  200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது. ஆகையால் ஒதுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு முறையாகச் செலவழித்து, அத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வது அவசியம். வைத்தியச்சாலையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை நிறுவுதல், வைத்தியர்கள், தாதியர் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, போக்குவரத்து மற்றும் வைத்திய ஊழியர்களுக்கான  தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு   விசேட சிகிச்சை சேவைகளை  வழங்கி வருகிறது.  இந்நாட்டில் பொதுமக்களிடமிருந்து தீர்வை வரியாக அறவிடப்படும்  பணத்தை  திரைசேரியில் சேகரிகரித்து அவற்றை மீள ஒன்று திரட்டி பொதுமக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.  இலவச சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக, அமைச்சுக்கு கிடைக்கும் இறுதி ரூபாவரை  மக்களின் நலன் கருதி முறையான திட்டமிடலுக்கமைய  ஊழல் இல்லாத முறையில் செலவிடுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமல்லாது தேசிய சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிகளுக்கு அதிகளவில்  வருகை தருவதால், தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இது எதிர்காலத்தில் இங்கு  சுற்றுலாக்கைத்தொழிலை  மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.  சுற்றுலாகைத்தொழிலை  மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றார்.