“கணேமுல்ல சஞ்சீவ“வின் நெருங்கிய நண்பன் “ஆமி உப்புல்” சுட்டுக்கொலை

122 0

ராகமை, படுவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராகமை படுவத்தை பகுதிக்க முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீடொன்றில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஆமி உப்புல்” என்பவரை ஏமாற்றி வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

45 வயதுடைய “ஆமி உப்புல்” என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “ஆமி உப்புல்” என்பவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் நெருங்கிய நண்பர் என தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் சகாக்களால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் “கணேமுல்ல சஞ்சீவ”வின் தரப்பினருக்கும் “கெஹெல்பத்தர பத்மே”வின் தரப்பினருக்கும் இடையில் உள்ள தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.