கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இந்தி மொழிக் கற்றல் திட்டம் ஆரம்பம்

69 0

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சார அமைப்பான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்துடன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இணைந்து இந்தி மொழி கற்றல் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில், துணை வேந்தர் (நிர்வாகம்) பிரிகேடியர் பிரதீப் ரத்னாயக்க, துணை வேந்தர் (கல்வி) பேராசிரியர் சனத் தம்மிகா, முகாமைத்துவம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயக் கல்வி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி லக்ஷிகா லியனாகே, ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,

மொழியானது இரு நாடுகளுக்கிடையேயான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் கலாச்சார மற்றும் இராஜதந்திர முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகளவில் இந்தி மொழியை 600 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். இந்தி மொழியை கற்பதனால் மாணவர்களுக்கு இந்தியாவின் செழுமையான இலக்கியம், ஊடகம், தத்துவம் மற்றும் தொழில் வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார கூறுகையில்,  பன்மொழி திறன்கள் மற்றும் பல் கலாச்சார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கல்விச் சூழலை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தால் ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பாரத் – இலங்கை இந்தி மாநாட்டில், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் முதல் முறையாக தொலைதூரக் கற்றல் இந்தி மொழிப் பாடத்திட்டத்தைத் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிதாகத் ஆரம்பிக்கப்பட்ட இந்தி பாடத்திட்டம் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு தெரிவுப் பாடமாக வழங்கப்படும். இது இராணுவ மற்றும் பொது மாணவர்கள் இரு பிரிவினருக்கும் திறந்த தெரிவாக இருக்கும். இந்தத் திட்டம் அடிப்படை மொழித் திறன்கள், கலாச்சார பின்னணி மற்றும் நடைமுறை பயன்பாடுகளை தகுதிவாய்ந்த இந்திய ஆசிரியர்களால் வழங்கப்பட்ட கட்டமைப்பான பாடத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முயற்சி இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான மக்கள் மட்ட ஈடுபாடு மற்றும் பரஸ்பர கற்றலை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.