பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களுக்கான நிதியளிப்பை நிறுத்துகிறதா அமெரிக்கா?

66 0

இலங்கை, மியன்மார், சிரியா, உக்ரைன் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குமென பல்வேறு சர்வதேச செயற்திட்டங்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவரும் நிதியளிப்பை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்திருப்பதாக ரொயிட்டர் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களுக்கான நிதியளிப்பை நிறுத்துமாறு அமெரிக்க நிர்வாக மற்றும் பாதீட்டு அலுவலகம் பரிந்துரைத்திருப்பதாக இவ்விடயத்துடன் தொடர்புடைய நம்பத்தகுந்த 3 தகவல் மூலங்கள் ஊடாகவும், அரசாங்கத்தின் உள்ளக அறிக்கைகள் ஊடாகவும் அறியமுடிவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்தப் பரிந்துரைகள் இவ்விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுதித்தீர்மானம் அல்ல எனவும், மாறாக இதுகுறித்து மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இராஜாங்கத்திணைக்களத்துக்கு உண்டு எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க நிர்வாக மற்றும் பாதீட்டு அலுவலகத்தினால் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கான நிதியளிப்பை நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக், நேபாளம், இலங்கை, கொலம்பியா, பெலாரஸ், சூடான், தென்சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மறுத்திருப்பதாக ரொயிட்டர் செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.