தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, லண்டன் தமிழ் கல்வியகம், பிரான்ஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள தமிழ் பண்பாட்டு அனைத்துலக மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டை கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தஸார் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பார். கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம் தலைமையில் திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் வரவேற்புரையினையும், பிரதம விருந்தினர் உரையை புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி நிகழ்த்துவார்.
கௌரவ விருந்தினர்களாக மீன்பிடித்துறை அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருந்தனன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டில் இந்தியாவில் இருந்து 50 பேராளர்களும்,தென்னாபிரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சுவிற்சர்லாந்து, நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசியஸ், ரீ யூனியன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பேராளர்கள், சான்றோர் பங்கேற்கவுள்ளனர்.
முருகப் பெருமான் திருவருளுக்கு பாத்திரமான பசுமை சித்தர் மற்றும் செல்வபாரதம் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கவுள்ளார்கள்.
நடனமாமணி ஸ்ரீமதி பூர்ண புஷ்பகலா வழங்கும் ஸ்ரீ பரத கலா அகாடமி மாணவிகளின் ‘அறுபடை வீடு’ நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெறும்.
கலை ஒளி முத்தையா பிள்ளை அறக்கட்டளை சார்பில் எச். எச்.விக்கிரமசிங்க பதிப்பித்து மு. நித்யானந்தன் அணிந்துரை வழங்கி வெளியிட்ட மாத்தளை எஸ். மரதன் கிருஷ்ணன் எழுதிய ‘இன்னுமொரு குறிஞ்சிப்பூ” நூலும் வெளியிடப்படவுள்ளது.
இம் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் மேற்கொண்டுள்ளார்.

