அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து சரக்குப் பொருட்களை ஏற்றிச்செல்லும் கொள்கலன் பாரவூர்திகள் மீண்டும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் பாரவூர்திகள் உரிமையாளர் சங்க தலைவர் சனத் மஞ்சுள குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த சில வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில் குறிப்பிடத்தக்களவு கொள்கலன் பாரவூர்திகள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் அண்ணளவாக சுமார் 500 வாகனங்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்படுகின்றன. துறைமுகத்திலிருந்து சரக்குப் பொருட்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக மீண்டும் வரிசை ஏற்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை, விடுவிப்பு முனைய அதிகாரிகள் மற்றும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக சரக்குப் பொருட்கள் முறையாக விடுவிக்கப்படவில்லை.
அத்தோடு 24 மணி நேரமும் சரக்குப் பொருள் விடுவிப்பு மேற்கொள்ளப்படாமையால் தற்போது இவ்வாறானதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. கொள்கலன் பாரவூர்திகளை நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கத்தால் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தரிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகாரிகள் பின்பற்றாமையால் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள், உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் சரக்கு கப்பல்கள் வேறு துறைமுகங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படலாம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் இவ்வாறு துறைமுகங்களில் தேங்கிடப்பதனால் காலாவதியாக கூடும். ஆகையால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவது அவசியம் என்றார்.

