கட்சி அரசியல் மக்களை முன்னேற்றுவதற்கானது என்ற உயரிய சித்தாந்தத்துடனும் செயற்பாட்டுடனும் வாழ்ந்துகாட்டியவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
சின்னத்துரையின் பத்தாவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. அக்கூட்டத்தில் அஞ்சலி உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது அரசியல் பயணம் என்பது எமது மக்களுக்கானதாக விட்டுக்கொடுப்பின்றியதாக அமையவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் சின்னத்துரை அவர்கள்.
அடக்கு முறைக்கு எதிரான தமிழ்த் தேசிய பயணப் பாதை என்பது போராட்டங்களும் சவால்களும் மிக்கது என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்து அதனைத் தேர்ந்தெடுத்து தலைவராக எம் மண்ணில் அவர் செயற்பட்டுள்ளார்.
எமது பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கக்கூடிய தலைவராக தனது குடும்ப வாழ்க்கை முறையைக் கூட அவர் வாழ்ந்தார். இதனை எம் மூத்தோர் வாயிலாக எம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. 1953ஆம் அண்டு தமிழ் அரசு வாலிபர் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்குழு உறுப்பினராக அவர் செயற்பட்டுள்ளார். பின் அவ்வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இளைஞர் முன்னணி ஊடாக அவர் பெரிதும் சேவையாற்றியுள்ளார். இம்முன்னணி 1953 காலப்பகுதியில் இன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவலவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டமை என பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளது. அதுபோன்று இவரின் காலத்திலேயே வாலிபர் முன்னணி தாயகத்தில் பல மாநாடுகளை கூட வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதனால் எமது மக்கள் தமிழ்த் தேசிய அரசியல்மயப்பட்டனர்.
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், தமிழர் உரிமையை வலியுறுத்திய திருமலை பாதயாத்திரை (1957), கச்சேரி நிர்வாக முடக்கல் போராட்டம் (1961) என்று பல போராட்டங்களில் இளைஞனாக முழுமூச்சுடன் தமிழரசு சின்னத்துரை அவர்கள் போராடியுள்ளார். சிறி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வேறு இனத்தின் உரிமை நோக்கிய போராட்டங்களிலும் அவர் சிறை சென்ற போதும் அவர் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.
உள்ளூராட்சி அரசியலில் அவரிடம் ஏனைய தலைவர்களிடத்தில் காணப்படாத நாகரிகம் காணப்பட்டுள்ளது. இது சகலரையும் பாரபட்சம் இன்றி அணைத்துச் செல்லும் பண்பாகும்.
இப்பண்பு எமக்கு இன்றும் முன்னோடியானது. அடிப்படையில் எமது வலி. கிழக்கில் இருந்து மாநகர சபை மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபை என பல கௌரவ அவைகளில் அவர் மக்கள் பிரதிநிதியாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவரின் வாழ்வியல் முறைமை ஏனையோருக்கு வழிகாட்டலாக அமைய வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.



