“எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி, வலிகாமம் வடக்கு மயிலிட்டி மிள்குடியேற்றக் குழு நான்காவது நாளாக தொடரும் இன்றைய (24) போராட்டத்தில் காணி உறுதிகளை கையில் ஏந்தியவாறு 500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
1990ஆம் ஆண்டு முதல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை சுமந்தவாறு வாழ்ந்துவரும் நிலையில் தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
சிறுவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பினர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய நாளில் தமது கைகளில் காணி உறுதிகளை கையிலேந்தியவாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
“நாங்கள் அரச காணிகளை கேட்கவில்லை; எமது சொந்த நிலத்தைத்தான் கேட்கிறோம்”, “எமது நிலத்தில்தான் எமது உயிர் போகவேண்டும்”, “இனியும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ முடியாது”, “எமது நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்” என தெரிவிக்கிறார்கள்.
இதன்போது முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் எனது ஊரில் இருக்கும்போது முதலாளியாக இருந்தேன். இன்று தொழிலாளியாக இருக்கிறேன். வாழமுடியாமல் தற்போது இருக்கிறேன். சொந்த நிலத்தை விட்டால் மீண்டும் தொழிலாளி ஆகிவிடுவேன் என்கிறார்.
நம்பிக்கையுடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவர் தெரிவிக்கையில்,
நான் பிறந்தது தற்போது இருக்கும் இடத்தில்தான். எனது சொந்த வீடு மயிலிட்டியில் என்று அப்பா, அம்மா கூறி கை காட்டுகிறார்கள். எமது வீட்டில் இராணுவத்தினர் இருக்கிறார்கள். அவ்வாறு என்றால் நான் எவ்வாறு எமது சொந்த வீட்டுக்குப் போவது? எங்கள் தலைமுறையும் இடப்பெயர்வு வாழ்க்கையை வாழ்வதா? என்று கேட்டார்.
நான்காவது நாளாக தொடரும் இன்றைய போராட்டத்தில் மத குருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வலி வடக்கு, மயிலிட்டி, காங்கேசன்துறை மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

