சிரிய தலைநகரில் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

79 0

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 63 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை சிரிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியள்ளது.

டமஸ்கஸ், ட்வீலா பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (22) ஆராதனை நடைபெற்றுள்ளது.

இதன்போது,  தேவாலயத்துக்குள் வந்த நபரொருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதலை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் மேற்கொண்டதாக் கூறப்பட்டாலும், அந்த அமைப்பு இந்த சம்பவத்தை இதுவரை உரிமைகோர வில்லை.

குண்டு தாக்குதலில் தேவாலயத்திற்குள் பலிபீடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பது புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்த லாரன்ஸ் மாமாரி, யாரோ ஒருவர் தேவாலயத்திற்குள் ஆயுதம் ஏந்தி நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அவர் குண்டை வெடிக்க செய்வதற்கு முன்னர் மக்கள் அவரை தடுக்க முயன்றனர் என அவர் ஏப்பி செய்தி  சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் இதேபோன்றதொரு சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அதில், 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 219 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.