வலி. வடக்கில் 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரும் போராட்டம்

86 0

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாவது நாளாகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது, இன்று 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளதோடு, தங்குதடையின்றி அமைதி வழியில் உணவு சமைத்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாடசாலைச் சிறுவர்கள் கூட தமது பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு, மூன்றாம் தலைமுறையாக தங்கள் நிலங்களுக்கான உரிமையைக் கோரி போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மயிலிட்டி, பலாலி, அந்தோணிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், போர் முடிவடைந்த பின்னரும் தங்கள் காணிகளை முழுமையாகப் பெறவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசாங்கமும் காணியை விடுவிப்பதாகக் கூறி, சிறிய பகுதிகளை மட்டுமே விடுவித்துள்ளன. இதனால், வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் காணி உரிமையாளர்கள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

“அனைத்துக் காணிகளையும் உடனடியாக விடுவிப்போம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், ஆறு மாதங்களாகியும் பெரியளவில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் நிலங்களை வைத்திருப்பதாகவும், தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறபோதும் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பது மக்களைத் தொடர்ந்தும் அகதிகளாக்குகிறது எனவும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் புதிய அரசாங்கம் இப்போராட்டம் குறித்து கவனம் செலுத்தும் வரை இது தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உறுதியளித்துள்ளனர்.