
இந்த இடத்தில் பல விபத்துகள் நடந்துள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இதே இடத்தில் இதற்கு முன்பு விபத்துக்குள்ளானதாகவும் வைத்தியர் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிறு குழந்தை என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து, பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

