மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்து, தற்போதுள்ள எரிபொருள் மாபியாவை மாற்றியமைத்து முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. இருந்த போதிலும் இன்று, அந்த முறைமையில் மாற்றம் வார்த்தைகளுக்குள் மட்டுண்டு, எரிபொருள் ஆற்றல் மாபியாவை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
கூரைகளின் மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகளுக்கான கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு ரூ.37 இல் இருந்து ரூ.20 ஆக 45% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
இது சூரிய சக்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை அல்ல. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நோக்கித் திரும்பும் பலரை அதனை விட்டும் விரட்டியடிக்கும் நடவடிக்கையாக அமைந்து காணப்படுகிறது.
அவ்வாறே இது எரிபொருள் ஆற்றல் மாபியாவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று (21) விசேட அறிவிப்பை விடுத்து தெரிவித்தார்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஏராளமான சிறிய மட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சூரிய ஆற்றல் தொழில்முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
1,000 தொழில் நடவடிக்கைகளில் பணிபுரியும் 40,000 க்கும் மேற்பட்ட மக்களை இந்த சூரிய சக்தி பேனல் கட்டணம் 45% குறைப்பு மோசமாகப் பாதித்துள்ளது. அவர்களின் தொழில்களும் கேள்விக்குறியாக மாறிவிட்டன. முழுத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நமது நாடு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில், 2024 ஆம் ஆண்டளவாகும் போது சூரிய மின்சக்தித் மூலம் நமது எரிசக்தி கட்டமைப்பிற்கு 500 மெகாவாட் பங்களிப்பு வழங்கப்பட்டன.
70% புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதே அரசாங்கத்தின் அவா என்றாலும், தற்போதைய அரசாங்கம் சூரிய ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் அழித்து எரிபொருள்கள் மீதமைந்த எரிசக்தி மாபியாவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது முறைமையில் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்பட்ட மாற்றமா? இல்லை. மாறாக தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி மாபியாவை அவ்வாறே தொடரும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சூரிய சக்தி நாட்டிற்கு 20 ஆண்டுகளுக்கு நிதி நிலைத்தன்மையை பெற்றுத் தருகிறது. நீண்டகால சேமிப்பையும் கொண்டு வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த துறையாகவும் காணப்படுகின்றன.
எரிபொருளை பயன்படுத்தும் போது நிதி நிலைத்தன்மையை கொண்டு வராது. சுற்றுச்சூழலுக்கும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

