தமிழர்களுக்கு வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி

558 0

ramasamy3மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மலேசிய பிரதமர், நஜீப் ரசாக், ஒரு மில்லியன் டொலர்களை, 2009ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நன்கொடையாக வழங்கினார்.
இந்த நன்கொடை, மலேசிய தமிழர் பேரவையின்  ஊடாகவே வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய பினாங் பிரதி முதலமைச்சர் பி ராமசாமி,  வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக ப்ரீ மலேசியா டுடே என்ற செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நன்கொடை உரிய வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்ததா?  இந்த நன்கொடைக்கான பயனாளிகள் தொடர்பாக மலேசிய தமிழ் பேரவைக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளையே, பினாங் பிரதி முதலமைச்சர், அனந்தி சசிதரனிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அனந்தி சசிதரன், இது குறித்து வடமாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எவருடனும் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது உண்மையில் வருத்தத்தை தரும் விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இது தொடர்பில் தாம் வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனிடம் கேட்டபோது, அவர், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடனும் மலேசிய உயர்ஸ்தானிகருடனும் தொடர்புக்கொள்வதாக உறுதியளித்தார் என்று பினாங் பிரதி முதல்வர் செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியன் டொலர்கள் எனும்போது அது பெரிய தொகையில்லாமல் இருக்கலாம். எனினும் அது பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
எனவே இந்த நன்கொடை தொடர்பில் மலேசிய தமிழ்பேரவை,  உண்மை தகவல்களை வெளியிடவேண்டும் என்று பினாங் பிரதி முதல்வர் ராமசாமி கோரியுள்ளார்.
இல்லையேல் பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும் என்றும் அவர் மலேசிய தமிழ்பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.