தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை வலுப்படுத்துமாறு ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

65 0

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை வலுப்படுத்துமாறு பல ஊடக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதன் அங்கமான இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகையாசிரியர்கள் சங்கம், சுதந்திரஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளான இலங்கை முஸ்லிம் மீடியா ஃபோரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் ஆகியவை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் நிறுவன ஒருமைப்பாட்டை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளன.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு்ளதாவது,

இலங்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்கும், பிரஜைகளுக்கு அதிகாரமளிப்பதற்கும், ஜனநாயகமான சமூகத்தை வளர்ப்பதற்கும் மிக முக்கியமான

வழிமுறைகளில் ஒன்றாக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க RTI சட்டம் திகழ்கிறது என்பதை ஜூன் 18, 2025 என திகதியிடப்பட்ட குறித்த கடிதம் வலியுறுத்துகிறது.

பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநிறுத்த ஒரு வலுவான தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு இன்றியமையாதது. இது இலங்கையர்களால் ஊழலை

அம்பலப்படுத்தவும், சமூக வாழ்க்கையை மேம்படுத்தவும், அநீதிக்கு எதிராக போராடவும் தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய அமைப்புகள் பல முக்கிய கரிசணைகளை எடுத்துக்காட்டியுள்ளன. மார்ச் 4, 2025 அன்று முன்னாள் தலைவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாகக் காணப்படும்

தலைமைப் பதவிக்கு, முறையாக நியமிக்கப்பட்ட தலைவர் இல்லாததால், RTI ஆணைக்குழு தற்போது கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிடமாக  இருக்கும் ஒரு முக்கியமான தலைமைப் பதவி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தலைமைத்துவ வெற்றிடம், செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதிலும் ஆணைக்குழுவிற்கு உள்ள திறனைக் கடுமையாகப்

பாதிக்கிறது, இதனால் அதன் செயல்திறன் தடைப்படுகிறது. மேலதிகமாக, ஆணைக்குழுவிற்கு தேவையான அத்தியாவசிய சட்ட ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதில்

அரசாங்கம் தாமதம் செய்து வருவது கவலையளிக்கிறது. இதனால் ஆணைக்குழு தனது விரிவான மேன்முறையீட்டுப் பணிகளை ஒரே ஒரு சட்ட அதிகாரியைக் கொண்டு கையாண்டு வருகிறது.  2024 முதல் மேலதிக சட்ட ஊழியர்களுக்கான பல அவசர கோரிக்கைகளை ஜனாதிபதி செயலகம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஆணைக்குழு தெரிவித்த போதிலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாமதம், நிறுவன சுதந்திரத்தை உத்தரவாதம் செய்யும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய விதிகளை, குறிப்பாக வேறு எந்த அமைச்சின் தலையீடும் இல்லாமல் நிதி

அமைச்சரின் நேரடி ஆலோசனையுடன் ஆணைக்குழு, தனது சொந்த ஊழியர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 13 இனை, குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், பிரிவு 16,

ஆணைக்குழு அதன் சொந்த சுயாதீன நிதியை நிர்வகிக்க வேண்டும் என்று கோருகிறது, ஆனால் தேசிய பாதீட்டில் தனிப்பட்ட நிதி வழங்கப்படாததால்  ஆணைக்குழு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆணைக்குழுவிற்கு தேவையான மனிதவளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான திறன் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக, அது நிறுவப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அது நிறுவன செயலிழப்பின் நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குறைபாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே ஒட்டுமொத்தமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், பொதுமக்கள் சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஊடக அமைப்புகள் வலியுறுத்தின.

ஆணைக்குழுவில் உள்ள இந்த முக்கியமான வெற்றிடத்தை நிரப்ப ஒரு தலைவரை நியமிப்பதை விரைவுபடுத்துமாறு குறித்த ஊடக அமைப்புகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தின. அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13 மற்றும் 16 ஐ முழுமையாக செயற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தேவையான பணியாளர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யவும், ஒரு முக்கியமான நிர்வாக மேற்பார்வை அமைப்பின் நிறுவன திறனை மேம்படுத்தவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்..

இலங்கையில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஆழப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உங்கள் உறுதிப்பாட்டை உணர்ந்துகொள்வதற்கான ஒரு அடிப்படை படியாகும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தீர்க்கமான தலைமைத்துவம் பிரஜைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், மிகவும் திறந்த மற்றும் பொறுப்புணர்வுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் உறுதியான அர்ப்பணிப்பை நிரூபிக்கும் என்று அமைப்புகள் நம்புகின்றன.