சட்டமூலத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அனுமதி

57 0

2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்றாம் பிரிவின் கீழ் முத்திரை வரியை அதிகரிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையில்  செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

2025 ஏப்ரல்  1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கு அமைவாக இவ்வாறு முத்திரை வரியை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இதற்கு அமைய, எந்தவொரு சொத்தும் குத்தகைக்கு வழங்கப்படும்போது அதற்கு முத்திரை வரி அறவிடப்படும் என்பதுடன், 2025 வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னர் காணப்பட்ட விகிதம் ஒவ்வொரு 1,000 ரூபாவுக்கும் அறவிடப்படும் 10 ரூபா தொகை 20 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.

 

அத்துடன், இந்தத் திருத்தத்தின் ஊடாக மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.01% பொருளாதார வருமானத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் இரண்டிற்கும் குழு அனுமதி வழங்கியது. இதற்கு அமைய 2020 முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பல பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அனுமதியைப் பெற இவை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

பாவனைக்கு உட்படுத்தப்பட்ட புடவைகளைக் (வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் உடைகள்) கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கும், மோட்டார் வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழில்துறை மற்றும் பழுதுபார்ப்பதற்கு அவசியமான வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கும் 2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற சீட்டாட்ட நிறுவனங்களுக்கான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்போது, சீட்டாட்டத்திற்கான உபகரணங்கள் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்போது குறித்த உபகரணங்கள் யாவை என்பது பற்றியும், அவை தொடர்பான சகல தரவுகள் மற்றும் தகவல்களையும் இலங்கை சுங்கத் திணைக்களம் பேண வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது.

அத்துடன், சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான சட்டமூலம் தொடர்பான பின்புலம் குறித்தும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் கருத்துத் தெரிவித்தனர்.

தனது கருத்துக்களைத் தெரிவித்த குழுவின் தலைவர், குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அரசாங்கம் இழந்துவரும் பெரும் அளவிலான வரி வருவாயை மீட்டெடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம்.அஸ்லம், கௌசல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.