ஈரான் – இஸ்ரேல் முரண்பாடு தொடர்பில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்றவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பெரும்பான்மை உள்ளது என்பதால் ஆளும் தரப்பு தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இஸ்ரேல் – ஈரான் மோதல் நிலவரம் தொடர்பில் விவாதம் கோரி எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்ட போது சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சித் தலைவரின் கட்சியில் அதிகளவில் தலைவர்கள் இருக்கின்றனர். நீங்கள் எதனையாவது கூறினால் அவற்றை தூக்கிச் செல்ல உதவியாளர்கள் பலரை உருவாக்க வேண்டாம். நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
எதிர்க்கட்சியில் சில பண்டிதர்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் இந்த பண்டிதர்களுடன் சென்று கஷ்டத்தில் விழ நேரிடும். எதவாது பிரச்சினையென்றால் எல்லோரும் கதைக்க தேவையில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசலாம், அத்துடன் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுக்கு பேசலாம். ஆனால் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படுவதில்லை.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சியில் 12 கட்சிகள் இருப்பதால் 12 தலைவர்கள் இருக்கின்றனர். இது தனி அரசியல் கட்சியல்ல. இங்கே பல கட்சிகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பண்டிதர்களுடன் நான் பணியாற்றுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். செயற்பாடுகளில் கீழ் நிலையில் இருப்பவர்களுடன் அன்றி பண்டிதர்களுடனேயே நான் இருக்கின்றேன் என்றார்.

