கொத்தலாவல பல்கலைக்கழக வைத்திய பீடம் மற்றும் கல்விமாணி பாடநெறி சார்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலவசக் கல்வி சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம், அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கல்வி வாய்ப்புகளை வழங்குவதாகும்.
அதாவது, அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், இலவசக் கல்விக்கு அப்பால், ஒவ்வொரு நபருக்கும் போதுமான தரம் கல்வி கிடைப்பதை உறுதி செய்தல் என்பன ஆகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையிலும் இலவசக் கல்வியும் சமவாய்ப்பையும் ஒரு அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொள்கிறது என்று கூறுகிறது.
ஆனால் அது அதற்கு முரணான முறையில் செயல்பட்டு வருகிறது. இதனையே அவதானிக்க முடிக்கிறது. ஆனபடியால், இந்த விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளும் முகமாக பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன் என்றார்.
இதன்படி, நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (17) எழுப்பிய கேள்வி,
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்திற்காக இலங்கை அரசாங்கம் இதுவரை செலவிட்டுள்ள தொகை எவ்வளவு?
இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர் செலுத்த வேண்டிய பாடநெறிக் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசாங்கம் செலவிடும் தொகை குறித்து தனித்தனியாக இந்தச் சபைக்கு அறிவிப்பீரா?
2025 முதல் கெடட் அல்லாத உள்நாட்டு மருத்துவ மாணவர்கள் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு ஏதுவான காரணங்கள் யாவை?
மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வழங்கத் தேவையான விசேட மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாக வரும் செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மைத் தன்மை யாது?
அப்படியானால், வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது இந்த விசேட மருத்துவர்களின் பற்றாக்குறை அதற்கு பாதிக்காமல் இருப்பதை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்ய முடியும்?
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கத்தால் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சூழலில் கெடட் அல்லாத உள்நாட்டு மருத்துவ மாணவர்களை இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்க்காமல் இருப்பதன் மூலம், சம வாய்ப்பில் கல்வி பெறும் உரிமையை மாணவர்கள் இழக்காமல் இருப்பதை அரசாங்கத்தால் எவ்வாறு உறுதி செய்ய முடியும்?
அரச அல்லது அரச சாரா உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விமாணி பட்டங்கள் அல்லது பாடநெறிகளின் அடிப்படையில், இதுவரை இலங்கை ஆசிரியர் சேவைக்கு (தேசிய/மாகாண) ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த பாடங்களுக்கு என்பது குறித்து இந்த சபைக்கு தனித்தனியாக அறிவிப்பீர்களா?
குறிப்பிட்ட கல்வித் தரம் (பட்டப்படிப்புக்கான உரிய காலம் / நடைமுறை பயிற்சி) இல்லாமல் கற்ற நபர்களை ஆசிரியர் பணியில் இணைத்துக் கொள்வதன் மூலம் பிள்ளைகள் மற்றும் அவர்களுக்கு இணையான கற்பித்தல் சேவைகளுக்கு அநீதி நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்வது எவ்வாறு ?
குறித்த உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விமாணி பட்டங்கள் அல்லது பாடநெறிகளின் தரம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு யாது?
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு சாதாரண மாணவர்கள் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பது, அரச சாரா உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் கல்விமாணி பட்டங்கள் அல்லது பாடநெறிகளைத் தொடர மாணவர்களை ஊக்குவித்தல் மூலம் தற்போதைய அரசாங்கம் இலவசக் கல்விக்கும் சமமான அணுகலுக்கும் காணப்படும் உரிமை எனும் அடிப்படைக் கோட்பாட்டை மீறுகிறது என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறதா?

