இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு

506 0

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.UN

இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவில் 177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெறவுள்ளது. அந்தவகையில் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறும்.

மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.