நம்பிக்கையை பாதுகாக்க முடியுமானவரை உழைத்துக் கொண்டிருக்கிறேன் – காத்தான்குடி நகர பிதா

58 0

கல்விமான்கள் பலரும் பல கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் எத்தனங்களை செய்த போதும் அவர்களுக்கு ஆணை வழங்காமல் காத்தான்குடி மக்கள் எங்களுக்கே அவர்களின் ஆணையை வழங்கினார்கள். காத்தான்குடி நகர சபையில் உறுப்பினராக, உதவி நகர பிதாவாக, நகர பிதாவாக இரு தசாப்தங்களாக பணியாற்றும் வாய்ப்பை காத்தான்குடி மக்களும், ஊர்த்தலைமைத்துவங்களும் எனக்கு வழங்கினார்கள். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்க முடியுமானவரை ஊருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் நகர பிதாவாக தொடர்ச்சியாக மூன்று முறை தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.எச்.எம். அஸ்பர் சிலோன் மீடியா போரம் உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (14) காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபையை மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் காத்தான்குடி நகருக்கு தேவையான அபிவிருத்தி வேலைகள், காத்தான்குடி நகரத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் செய்து வருகிறேன்.

காத்தான்குடி தலைமைத்துவங்களும், அதிகாரிகளும் வழங்கும் ஒத்துழைப்பே காத்தான்குடியை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது. எங்களின் பணிகளுக்கு ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வழங்கும் பணி சிறப்பாகவே இருக்கிறது.

நான் தவிசாளராக பதவியேற்று என்னை கெளரவித்த முதல் நிகழ்வாக இது அமைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.