இந்தியாவில் மீண்டும் ஒரு உலங்குவானூர்தி விபத்து!

79 0

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் – கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் ஏழு பேர் பயணித்திருந்த நிலையில் ஐவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தற்போது அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த உலங்குவானூர்தி காணாமல் போனதாக  மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர்  அறிவித்திருந்த நிலையில், தற்போது உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானதாக உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த உலங்குவானூர்தியில், ஒரு விமானி உள்ளிட்ட ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமான விபத்திற்கு சீரற்ற காலநிலை ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  கடந்த 12ஆம் திகதி குஜராத்தின் – அகமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து உலக விமானப் போக்குவரத்துத் துறையை உலுக்கியிருந்தது.

இந்தியாவில் மீண்டும் ஒரு உலங்குவானூர்தி விபத்து! பயணித்த அனைவரும் பலி.. | Uttarakhand Helicopter Crash

இதில், விமானிகள்  மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்திருந்த நிலையில், ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்திருந்ததுடன் ஏனைய அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதுடன்,  விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் என்று மொத்தம் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், மீண்டும் இன்று காலை இந்தியாவில் இடம்பெற்ற இந்த உலங்குவானூர்தி விபத்து ஒருவித அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.