“மாவட்டச் செயலாளரை மாற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும்” மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பகிரங்கமாக கொளுத்திப் போட்ட இந்த நெருப்பு இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்களான குத்தாலம் கல்யாணம், அவரது மகன் க.அன்பழகன் ஆகியோர் மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வுமான நிவேதா எம்.முருகனுக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தற்போது இவர்களோடு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனும் சேர்ந்திருக்கிறார்.தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்துவதற்காக திமுக மண்டல பொறுப்பாளர்கள் ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 15-ம் தேதி மயிலாடுதுறையில் அமைச்சர் நேரு கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் தான் நிவேதா முருகனுக்கு எதிராக தடாலடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் ஞானவேலன்.
இக்கூட்டத்தில் நிவேதா முருகனுக்கு எதிராக பகிரங்கமாகவே ஞானவேலன் குற்றச்சாட்டுகளை அடுக்கியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இன்னொரு மாவட்ட துணைச் செயலாளரான செல்வமணி, ஞானவேலனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது, மாநில தகவல் தொழிநுட்ப அணி துணைச் செயலாளர் பி.எம்.தர் உள்ளிட்டோர் ஞானவேலனுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசியில் அமைச்சர் நேரு தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கிறார். கூடவே, “என்னய்யா கட்சி நடத்துறீங்க..?” என்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டிருக்கிறார் நேரு.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு திமுக தலைமை இரண்டு தரப்பையும் அறிவாலயத்துக்கே அழைத்து ‘அட்வைஸ்’ செய்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் இருதரப்பும் சமாதானமாகாமல் மயிலாடு துறைக்கும் சென்னைக்குமாக ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக மு.ஞானவேலனிடம் பேசினோம். மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் கட்சிக்காரர்கள் நலனுக்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் எதுவுமே செய்யவில்லை. கட்சியினரை மதிப்பதில்லை. இதனால் அவர் மீதான அதிருப்தி அதிகமாகியிருக்கிறது.
இப்படியான நிலையில் அவர் மாவட்டச் செயலாளராக நீடித்தால் மாவட்டத்தில் 3 தொகுதிகளையும் இழக்க நேரிடும். இதைத்தான் அன்றைய கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசினேன். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் 36 பேர் தலைமையிடம் புகாரும் அளித்துள்ளனர்” என்று சொன்னார் அவர்.
நிவேதா முருகனோ, “2016-ல் மாவட்டப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற நாள் முதல் கட்சி வளர்ச்சிக்காகவும், கட்சியினர் நலனுக்காகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். ஒரு மாதத்துக்கு முன்பு வரை என்னுடன் நெருக்கமாக இருந்த சிலர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. அதிலிருந்து அவர்களுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்டேன். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் தான் தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். தலைமைக்கு எல்லாம் தெரியும் என்பதால் இந்த பொய்களை எல்லாம் நம்பமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
மாவட்ட திமுகவினரோ, “உள்ளாட்சி பதவிகளில் இருந்தவர்களின் பதவிகாலம் முடிந்துவிட்டதால் ஒப்பந்தப் பணிகளில் அவர்களால் தலையிட முடியவில்லை. அவற்றை கட்சியினருக்கு பிரித்துக் கொடுப்பதால் மாவட்டச் செயலாளரை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் சாதி ரீதியாக செயல்படுகிறார், ஒப்பந்த பணிகளை மாற்றுக் கட்சியினருக்குக் கொடுக்கிறார் என நிவேதா முருகன் மீது குற்றசாட்டுகளை சுமத்துகிறார்கள்” என்கிறார்கள்.
நிவேதா முருகனை பிடிக்காதவர்களோ, “ஒப்பந்த பணிகளை மாற்றுக் கட்சியினருக்கு கொடுக்கிறார். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார். மாவட்ட கட்சி அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னோடு கூடவே இருப்பவர்களுக்குக் கூட அவர் எதுவும் செய்யவில்லை” எனப் புழுங்குகிறார்கள்.
பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக வந்த கதையாக தேர்தலுக்காக கட்சியினரை தயார்படுத்துவதற்காக புறப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் நடத்தும் கூட்டங்களில் உட்கட்சி பஞ்சாயத்தை பேசிமுடிப்பதே பெரிய பஞ்சாயத்தாக இருக்கிறது.