திரும்பிய பக்கமெல்லாம் குப்பை… திக்கித் திணறும் திருப்பூர் மாநகராட்சி!

20 0

திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.

திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை காலம் காலமாக பாறைக்குழிகளில் நிரப்பி வருகிறது மாநகராட்சி. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றியம் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் மாற்று இடம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறது மாநகராட்சி.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போராட்டங்களை நடத்தியது. அப்போதும் திமுக கூட்டணிக் கட்சிகள் மவுனம் சாதித்தன. திருப்பூர் சிபிஐ எம்பி-யான சுப்பராயன் மட்டும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரி உயர்வைக் கைவிடக் கோரி கோரிக்கை வைத்தார்.

அதற்கே, திமுக மேயர் தினேஷ்குமாரையும் எம்எல்ஏ-வான செல்வராஜையும் நேரில் அழைத்துப் பேசிய நகராட்சி நிர்வாகக் துறை அமைச்சர் கே.என்.நேரு, “இந்தப் பிரச்சினையை எல்லாம் உங்கள் அளவில் முடிக்காமல் இப்படித்தான் சென்னை வரைக்கும் வரவைப்பீர்களா?” என கடுமை காட்டினார்.

அதேபோல் இப்போது வீதிக்கு வீதி தேங்கிக் கிடக்கும் குப்பைகளின் தீவிரத்தை உணர்ந்து, ‘திருப்பூர் மாநகராட்சி குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சிறப்புக் குழு ஒன்றை அனுப்பி வைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் சுப்பராயன். இருப்பினும் மாமன்றத்தில் இதுகுறித்துப் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய திமுக கூட்டணிகள், வீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சுப்பராயன், தினேஷ்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, “மக்கும் குப்பை 500 டன், மக்காத குப்பை 200 டன் என்றால் இதனை முறையாக தரம் பிரித்தாலே குப்பைப் பிரச்சினை சரியாகிவிடும். ஆனால், அப்படிச் செய்யாமல், இன்னும் பாறைக்குழியைத் தேடிக்கொண்டிருப்பதால் தான் வீதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சினை என்றாலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும். ஆனால், 16 லட்சம் மக்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையில் திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கள்ள மவுனம் காப்பது கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

காளம்பாளையத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் சதீஷ்குமார், “வரி உயர்வு, தண்ணீர் பிரச்சினை, குப்பை, சுகாதாரம் என பல்வேறு பிரச்சினைகள் மாநகராட்சியில் தீர்க்கப்பட வேண்டி இருக்கிறது. முந்தைய ஆட்சியில் மாநகராட்சி அவலங்களைக் கண்டித்து அடிக்கடி போராட்டம் நடத்தியவர்கள், இப்போது ‘கூட்டணி தர்மத்துக்கு’ கட்டுப்பட்டு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காளம்பாளையத்தில் குப்பை கொட்டும் பிரச்சினையில் பல்லடம் கும்பல் தன்னை பணம் கேட்டு மிரட்டியதாகவும், கடைசி நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் மாமன்றக் கூட்டத்திலேயே சொல்கிறார் மேயர் தினேஷ்குமார். அப்படியானால், தன்னை பணம் கேட்டு மிரட்டியது யார் என்பதையும் அதற்கான ஆதாரத்தையும் மேயர் வெளியிட வேண்டும். இல்லையென்றால், குப்பை முறைகேடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

அன்பகம் திருப்பதி, சதீஷ்குமார்

சிபிஐ கட்சியைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியம் கூட்டணி தர்மத்தைக் கடந்து திமுக-வினருடன் அதீத நெருக்கம் காட்டுவதாக அவரது கட்சியினரே முணுமுணுக்கிறார்கள். சிபிஐ மூத்த மாமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து பேசியபோது “நாங்கள் மவுனம் காக்கவில்லை. குப்பை பிரச்சினை தொடர்பாக பல முறை பேசிவிட்டோம். இனியும் குப்பை விவகாரத்துக்கு மாநகராட்சி ஒரு தீர்வைக் காணாவிட்டால் எதிர்காலத்தில் இதனால் பெரும் பிரச்சினை ஏற்படும். அப்போது ஆளும் கட்சிக்குத்தான் சிக்கல்” என்றார்.

எம்பி-யான கே.சுப்பராயனோ, “பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி அரசுக்கு கோரிக்கை அனுப்புகிறோம். ஆனால், ஆக்கபூர்வமாக செய்துமுடிக்க வேண்டிய விஷயங்களுக்குக் கூட செவிசாய்க்காமல் இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது. நியாயமாக செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை செயல்படுத்த ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது” என்றார். குப்பைப் பிரச்சினை அழுகி நாற்றமெடுத்து ஆளும் கட்சியைக் ஆட்டிப் படைப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வைக் கண்டால் நல்லது!