
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரது கணவர் ப்ரதிக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் லண்டனில் குடியேறுவதற்காக கோமி வியாஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மருத்துவர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு லண்டன் செல்வதற்காக அண்மையில் ப்ரதிக் ஜோஷி ராஜஸ்தான் வந்துள்ளார். இந்த சூழலில் ஏர் இந்தியா விமான விபத்தில் ப்ரதிக் ஜோஷி, கோமி வியாஸ், அவர்களது மூன்று குழந்தைகள் என மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்களது சொந்த ஊரான பன்ஸ்வாரா சோகத்தில் மூழ்கியுள்ளது.