வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவினர்கள்

408 0

jaffna_misingprotest_வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட செயலணியின் அமர்வில் கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் எமது உறவுகளை காணாமல் போகச் செய்தவர்களையும், அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தவர்களுடைய பதவிகள் பறிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட வேண்டும் என்றும் தெரிவித்தள்ளனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி செயலணியில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய உறவினர்களையும் விசாரணை அதிகாரிகளாக உள்ளீர்க்க வேண்டும் இதன் பின்பே நல்லிணக்கம் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட செயலணியின் அமர்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வமர்பில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய உறவினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். காணாமல் போனவர்களை தேடிக் கண்டறியும் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் அசமந்ப் போக்கை கடைப்பிடிக்கிறது. மைக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழுவினால் நீண்ட காலமாக இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாணைக்குழுவினால் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இதுவரை நடைபெற்ற விசாரணைகளின்படி காணாமல் போகச் செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு பதிலாக மரண சான்றிதழ்கள் அல்லது நட்ட ஈடுகளை பெற்றுத்தருகின்றோம் என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செயலணியில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய உறவினர்களையும் விசாரணை அதிகாரிகளாக உள்ளீர்க்க வேண்டும். எத்தனையோ போராட்டங்களை நடாத்தியும் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களையும் எங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட இடத்தில் இருந்த இராணுவ முகாங்களின் இராணுவச் சிப்பாய்கள் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறான விசாரணைகளில் காணாமல் போனவர்களுக்கு காரணமாக உள்ளவர்களை கண்டறிய வேண்டும். அதிலும் எமது உறவுகளை பிடித்துச் சென்றவர்களும், எமது உறவுகளை பிடித்து வருமாறு கட்டளை பிறப்பித்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை நினைவுபடுத்தும் முகமாக நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். அந்த நினைவு தூபியினை பார்க்கும் போது எங்களிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகள் ஞாபகத்திற்கு வரும் அதனால் நாங்கள் கவலை அடைந்தாலும் பறவாயில்லை. இனிவரும் காலங்களில் உறவுகள் எதுவும் இவ்வாறு காணாமல் போகச் செய்யப்படக் கூடாது என்ற நினைவும் அத்தூபியினை பார்த்ததும் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.