போரினால் உருக்குலைந்துள்ள காஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் சென்றிருந்த படகில் பயணித்த பிரெஞ்சு மருத்துவர் ஒருவர், இஸ்ரேல் இராணுவத்தினர் பயணிகளிடம் அருவருக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த படகில் ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உட்பட 12 ஆர்வலர்கள் பயணித்துள்ளனர். குறித்த படகானது இஸ்ரேல் அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு, பயணிகள் அனைவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதில் தன்பர்க் உட்பட நால்வர் மட்டும் இஸ்ரேல் அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் ஆவணங்களில் கெயெழுத்திட்டு, நாடுகடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே பிரெஞ்சு மருத்துவர் Baptiste André இஸ்ரேலிய அதிகாரிகளால் ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய அதிகாரிகள் கேலி செய்து, வேண்டுமென்றே பயணிகளின் தூக்கத்தை இழக்கச் செய்ததாகவும், குறிப்பாக தன்பர்க்கை அவர்கள் துன்புறுத்துவதை நோக்கமாக கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யாராவது தூங்கிவிட்டால், இஸ்ரேலிய அதிகாரிகள் சத்தமாக இசைத்து நடனமாடியதாகவும், உணவு மற்றும் தண்ணீரைப் பெறுவதில் சிரமப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட தமக்கு சட்டப்பூர்வ தகுதிகள் இல்லை, ஆனால் தவறான நடத்தை செயல்கள் இருந்தன என்பது மட்டும் உறுதி என ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு சுதந்திர புளோட்டிலா கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு படகுதான் மேட்லீன், ஜூன் 1 ஆம் திகதி இத்தாலியில் இருந்து காஸாவிற்கு உதவிப் பொருட்களை வழங்குவதற்காக புறப்பட்டது.
அந்தப் படகில் தன்பர்க் உட்பட 12 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், காஸா கடற்கரையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் இஸ்ரேலிய கடற்படையினரால் படகு தடுத்து நிறுத்தப்பட்டு, 12 பேர்களும் கைது செய்யப்பட்டனர்.

12 பயணிகளில், தன்பர்க் உட்பட நான்கு பேர், நாடு திரும்புவதற்கான நாடுகடத்தல் ஆவணங்களில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர், மற்ற எட்டு பேர் நீதிமன்ற விசாரணைக்காக இஸ்ரேலிய காவலில் உள்ளனர்.
இதனிடையே, “சர்வதேச கடல் எல்லையில் வைத்தே தங்களை கடத்தி, தங்கள் விருப்பத்திற்கு மாறாக இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றதாக தன்பர்க் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
காஸா மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் எண்ணற்ற பிற மீறல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு உரிமை மீறல் என தன்பர்க் குற்றஞ்சாட்டியிருந்தார்.
காஸா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிரான அமைதியான போராட்டமே இந்தப் பயணம் என்றும் தன்பர்க் கூறியுள்ளார்.

