வாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம்: தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் ஆம் ஆத்மி போராட்டம்

242 0

வாக்காளர் அறிந்து கொள்ளும் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. எனினும் இந்த எந்திரங்களில் மோசடிக்கே வாய்ப்பு இல்லை என தேர்தல் கமிஷன் சாதித்து வருகிறது.

ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்வது எப்படி? என்பதை டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ் கடந்த 9-ந் தேதி செய்து காட்டினார். இதற்காக மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்திய அவர், உண்மையான எந்திரத்திலும் இதுபோன்று தில்லுமுல்லு செய்ய முடியும் என அறிவித்தார்.

இந்த நிலையில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை வாக்காளர் அறிந்து கொள்ளும் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில மந்திரியுமான கோபால் ராய் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.