பொசன் பண்டிகையை முன்னிட்டு 19,185 தன்சல்கள்

79 0
2025 பொசன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் 19,185 தானசாலைகள் (தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) விசேட வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட தானசாலைகளின் விவரம்:

கொழும்பு – 944, கம்பஹா – 1,792, களுத்துறை – 977, கண்டி – 1,264, மாத்தளை – 812, நுவரெலியா – 352, காலி – 1,186, மாத்தறை – 1,021, அம்பாந்தோட்டை – 533, யாழ்ப்பாணம் – 3, கிளிநொச்சி – 3, முல்லைத்தீவு – 17, வவுனியா – 21, மன்னார் – 2, மட்டக்களப்பு – 9, அம்பாறை – 584, கல்முனை – 14, திருகோணமலை – 152, குருணாகல் – 2,114, புத்தளம் – 731, அனுராதபுரம் – 2,301, பொலன்னறுவை – 650, பதுளை – 968, மொனராகலை – 716, இரத்தினபுரி – 1,097, கேகாலை – 922.

“பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கமைப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில், 2025 மே 6 ஆம் திகதியன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

இந்த வழிகாட்டுதல்களில், தானசாலைகளை சுகாதார அதிகாரிகளுடன் பதிவு செய்தல், பொது சுகாதார பரிசோதகர்களால் தகவல் சேகரிப்பு, உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கை சுத்தப்படுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகள், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு தயாரிப்பு, கழிவு அகற்றல், உணவு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் பரிசோதனை ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

தானசாலைகளின் செயற்பாடு, உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது எனவும், முறையற்ற உணவு தயாரிப்பு, பொருத்தமற்ற சேமிப்பு, மற்றும் சுகாதார நடைமுறைகளின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகவும், பொது சுகாதாரத்தை பாதுகாக்க முறையான உணவு சுகாதார நடைமுறைகளை உறுதி செய்வது அவசியம் எனவும் இந்த வழிகாட்டுதல்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.