பாடசாலைகளில் டெங்கு அல்லது சிக்குன்குன்யா நோய் பரப்பும் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அரச ஊழியர்களை இலக்காக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் ஜூன் 15 முதல் பாடசாலை அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது இலங்கை முழுவதும் டெங்கு நோய் படிப்படியாக அதிகரித்து, கடுமையான அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறை எச்சரிக்கையின்படி, பல பாடசாலை மாணவர்கள் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் உட்பட எடுக்கப்படலாம் என கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்தச் சுற்றறிக்கைக்கு பாடசாலை அதிபர்கள் தர நிர்ணய அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

