கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் முதல் அம்சமாக கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோர் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவோ அல்லது பகிரங்க வாக்கெடுப்பு ஊடாகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.
கொழும்பு மாநகர சபையை தாம் கைப்பற்றுவதாக ஆளுங்கட்சி குறிப்பிடுகின்ற நிலையில், கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளுங்கட்சிக்கு இடமளிக்க போவதில்லை, தாம் ஆட்சியமைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகிறது.
தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 81,814 வாக்குகளைப் பெற்று 48 ஆசனங்கைக் கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 58,375 ஆசனங்களை கைப்பற்றி 29 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஏனைய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி 26,297 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9314 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 8630 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், சர்வஜன சக்தி 3911 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் முறையே கைப்பற்றியுள்ளன. அத்துடன் 6 அரசியல் கட்சிகளும், 5 சுயேச்சைக் குழுக்களும் மொத்தமாக 16 ஆசனங்களை முறையே கைப்பற்றியுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க வேண்டுமாயின் 59 ஆசனங்களுடன் தனித்த பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ கொழும்பு மாநகர சபையில் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் ஆசனங்களைப் பெறவில்லை.ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சிகளோ அல்லது சுயேச்சைக் குழுவோ ஒன்றிணைந்தால் மாத்திரமே ஆட்சியமைக்க முடியும். அதேபோல் எதிர்க்கட்சிகள் அனைத்தும், சுயேச்சைக் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஆட்சியமைக்க முடியும்.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற வேண்டுமாயின் மேலதிகமாக 11 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதாயின் மேலதிகமாக 30 ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்தால் ஆட்சியமைப்பதற்கு மேலதிகமாக 17 ஆசனங்களே தேவைப்படும். ஆளுங்கட்சிக்கு எதிராக ஆட்சியமைப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறன பின்னணியில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் சகல எதிர்க்கட்சிகளுடனும், சுயேச்சைக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு இரு தரப்பிலும் கடும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கன்னி கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவுறுத்தி மேற்கு உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கொழும்பு நகர மண்டபத்தில் 2025.06.16 ஆம் திகதியன்று காலை 09.30 மணியளவில் கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு கூடவுள்ளது.
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் முதல் அம்சமாக கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோர் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவோ அல்லது பகிரங்க வாக்கெடுப்பு ஊடாகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.

