டெங்கு, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் வீதம் உயர்வு

94 0

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025.05.31 ஆம் திகதி வரையாள காலப்பகுதியில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில்  சதவீதத்தில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் வீதம் உயர்வடைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட ஆலோசனை வழிகாட்டல் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் ஒழிப்புக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட ஆலோசனை வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பாடசாலை சூழலில் நுளம்பு பரவலுக்கு ஏதுவான வகையில் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் இனங்காணப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் பாடசாலையை அண்மித்த சூழலில் நுளம்பு பரவாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பான சூழலை பேண்வதற்காக இதற்கு முன்னர் வெளியிட்ட 2010/22 மற்றும் 30/2017 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு  ஆலோசனை வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய வகையில் புதிய ஆலோசனை வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலையின் கல்வி செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை தயாரிப்பதற்குரிய  திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டல்கள் குறித்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்,  பிரிவெனா பாடசாலையின் நிர்வாகம்,  தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதிகள் மற்றும் மாகாண கல்வி நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.