வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






