பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டில் 1400 அளவிலான புகையிரத கடவைகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் 400 இற்கும் அதிகமானவை பாதுகாப்பற்ற கடவைகளாக உள்ளன. போக்குவரத்து துறையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச் ) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரச மற்றும் தனியார் பேரூந்து சேவை, பயணிகள் முச்சக்கரவண்டி சேவை மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை ஆகிய சேவைகளை கண்காணிக்கும் சபையில் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்துக்கமை வரவேற்கத்தக்கது.
பேருந்து மற்றும் புகையிரதங்கள் பொது பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் தான் பயணிக்கிறார்கள்.இதற்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண முடியாது என்பதை அறிவோம். நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
நடுத்தர குடும்பம் ஒன்று தமது மாத வருமானத்தில் 25 சதவீதத்தை பொது போக்குவரத்து சேவைக்காக செலவழிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.அதேபோல் சொந்த வாகனம் வைப்பிருப்பவர்கள் தமது வருமானத்தில் பெரும்பங்கினை எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக செலவழிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவை பிரதான ஒன்றாக காணப்படுகிறது. புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகள் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளாகுகிறார்கள்.புகையிரதங்கள் தாமதமடைதல், சேவைகள் இரத்தாகுதல் வழமையாகி விட்டது.இதனால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை.பாரியதொரு இடைவெளி காணப்படுகிறது. அண்மையில் புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். ஆகவே காணப்படும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

