செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிக்கு போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றனர். அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணம் செம்மணியில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியிலான பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை கொண்டுள்ளது. இங்கே எவ்வித பாதுகாப்பும் போடப்படவில்லை. மக்கள் அங்கு சென்று எதனையும் செய்யலாம் என்பதை போன்று உள்ளது. அந்த புதைகுழி தொடர்பான நடவடிக்கைகளுக்ககாக போதுமான நிதி இல்லை. அங்கு அகழ்வுகளை நடத்துவதற்கும் சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் நிதி போதுமாக இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்கும் போதுமானது அல்ல.
போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றனர். இதனால் அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம்.
1996 காலப்பகுதியில் அங்கே நடந்த கிருஷாந்தி கொலை வழக்கின்போது 600 பேர் அங்கிருந்து காணாமல் போனமை தெரியவந்தது. இதனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நிதியை ஒதுக்குமாறு நாங்கள் கோருகின்றோம். இதனை பாதுகாப்பதற்காகவும், சாட்சியங்களை பாதுகாப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.