எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் பொய்கள் சமூகமயமாக்குவதற்கு இனி இடமளிக்க போவதில்லை. குறுகிய நேரத்துக்குள் பதிலளிக்கப்படும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிடும் பொய்களுக்கு இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டு மக்கள் ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்று வழங்கிய ஆணைக்குழு அமைய அரசாங்கம் செயற்படுகின்ற நிலையில், ஒருசிலர் கூச்சலிடுகிறார்கள்.இவர்களின் கலக்கத்தை எம்மால் நன்கு அறிந்துக் கொள்ள முடிகிறது.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
323 கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரணை செய்யப்படுகிறது.
ஆகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலமளிக்க வேண்டும்.
இந்த நாட்டில் பல ஊழல் மோசடியாளர்கள் உள்ளார்கள். வெந்நிற ஆடையணிந்தவர்கள் செய்த ஊழல் மோசடிகளால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
ஒருசில ஊழல்வாதிகள் தற்போது சிறையில் உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிற தரப்பினருக்கு விற்பனை செய்த விவகாரம் உலகில் எங்காவது நடந்ததுண்டா. அவ்வாறான சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. அந்த நபர் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளார்.
அரசியல் சாபம், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் இனி அரசியலுக்கு வர போவதில்லை என்று ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டு விட்டு பதவி விலகியவர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உரையாற்றுவதற்கு அனுமதி கோரிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதி தலைவர் அனுமதி வழங்கவில்லை.
இதன்போது சமிந்த விஜேசிறி தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவை விமர்சித்தார்.இதற்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதி தலைவர், சபையை கட்டுப்படுத்தி விட்டு, சமிந்த விஜயசிறியை நோக்கி தவறான வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள்,அதனை நீக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார.
தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நான் இவரது பெயரை குறிப்பிடவில்லை. பொதுவாக குறிப்பிட்டேன். ஆனால் இவர் கலக்கமடைந்து தொப்பியை போட்டுக்கொள்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விற்பனை செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழிமுறை ஏதும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் உள்ளதா என்பதை நீதியமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் பொய்கள் சமூகமயமாக்குவதற்கு இனி இடமளிக்க போவதில்லை. குறுகிய நேரத்துக்குள் பதிலளிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கு இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

