பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி

110 0

குருணாகலில் உள்ள குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்கும் நான்கு மாணவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து மாணவியை காப்பாற்றி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த மாணவி, கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று வாவியில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்களான நான்கு மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.