ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார்.
மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக காவல்துறையினர் இணைந்து நேற்று (02) நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
45 பேருந்துகள் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 15 பேருந்துகளும் 19 தனியார் பேருந்துகளும் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் வேகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு இல்லாத நிலையில் குறித்த பேருந்துகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள தேவைக்கு புறம்பான மின்விளக்குகள் மற்றும் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு இதன் போது அறிவுறுத்தப்பட்டது.



